Saturday, August 9, 2008

தோல்விகள் தொலைவில் நிற்கட்டும்


புழுதி படிந்த போர்களத்தின் பாசறையில்
குருதி படிந்த வாளை துடைத்து
வானை நோக்கிய பொழுது
விழியின் நீர்த்துளிகள் சில
தோல்வியினை பறைசாற்றின.............
இதயத்தில் இம்சைகள்..........
மனதில் ரணங்கள்.........
செல்லும் பாதைகள் எங்கும் தடைகற்கள்........
ஒரு பனி படர்ந்த நாளின்
புகை படிந்த கண்ணாடியாய்
தோல்விகளால் வாழ்க்கை தெளிவில்லாமல்...............
திசைகளின் கிழக்கு பிரதேசங்களிலிருந்து
சில பறவைகள் கீழிறங்கி வந்தன...........
தங்களின் முயற்சியின் சிறகுகளை
பரிசளித்து விட்டு பறந்தன...............
காற்றின் இசைக்கு தலை அசைத்த
பூக்கள் சிலதங்கள் விதைகளை
பரிசளித்து விட்டு தங்கள் பணியை தொடர்ந்தன...............
வானப் பிரதேசங்களில் ஒன்றாய்
கூடிய மேகங்கள் நீர்த்துளிகள்
சிலவற்றை தூவி குளிர்வித்தன.................
இழப்பதற்கு ஒன்றுமில்லை
மெல்லியதாய் காற்று ரீங்காரமிட்டு
ஆறுதலாய் தழுவியது................
பிம்பங்களை பிரதிபலிக்கும்
கண்ணாடியை போல்
தெளிவாய் சில வெளிச்ச பாதைகள் முன்னே.................
மனதில் மூலைகள் எங்கும்
உறுதிகள் இருக்கும் வரை..........
நினைவுகள் முழுவதும்
நம்பிக்கைகள் நிரம்பி வழியும் வரை........
இதயம் முழுதும்
வலிமைகள் இருக்கும் வரை...........
தோல்விகள் என்றும்
தொலைவில் நிற்கட்டும்.
இர.குமார்.

Thursday, August 7, 2008

இது மனதின் மழைக்காலம்

ஒரு குளிர்கால மாலை
இருளும் வேளையில்
சில நீர்த்துளிகள்
புவியை நோக்கிச் சிதறின.............

வெளிச்சப் பறவைகள்
தங்கள் சிறகுகளை முடக்கி
ஓயும் வேளையில்......
நிலவு தன் முகம்
காட்டி நகைத்தது..............

பறவைகள் சில விரைவாய்
தங்கள் கூடுகள் தேடின........
மரங்கள் மகிழ்ச்சியாய்
தங்கள் கிளைகள் விரித்தன......

மாலை மங்கும் வேளையில்
முகம் எங்கும் துளிகளாய்
இரு மான்விழிகள்
குறும்பாய் விழித்தன என்னை.......

அழகின் சாயல்கள்
சிறிதும் குறையாமல்
அதரங்கள் இரண்டு விரிந்து
இசையை தெளித்தன......

தோகைகளே இல்லாமல்
இரு கால்கள் அழகாய்
இங்கே நடை பயின்றன.

உன்னை பார்த்தபோது
நொடிகள் ஏனோ
நின்று போயின......

சிறகுகள் சில முளைத்தன......
உலகம் ஏனோ சுழன்றது கீழே........

பொழிந்தும் பொழியாமலும் மழைச்சாரல்கள்
வெளியே மட்டும் அல்ல....

உள்ளேயும் கூடத்தான்.............

இது ஒரு மழைகாலம்...........
புவியில் மட்டுமில்லை..........

என் மனதிலும் கூடத்தான்.

குமார்

நட்சத்திரங்கள் மண்ணில்.........[நாங்கள் கிள்ளைகள்]

ஒரு மழை கால மாலை நேரம்.........
மயில்கள் தோகைகள் விரிக்க
மேகங்கள் எங்கும் திரள
வானை நோக்கிய பொழுது
ஏனோ நட்சத்திரங்கள் அங்கில்லை.............

தூர் வாரிய ஓடையின் அருகே
சில காகித கப்பல்களோடு
கள்ளமில்லா சிரிப்பில்
சில வெள்ளை மனங்கள்
உவகை கொண்டன................

எண்ணங்களில் மாசில்லாமல்
வண்ணங்கள் அனைத்தும் கொண்ட
வானவில்லின் அழகோடு
வஞ்சனைகள் ஏதும் இல்லாமல்
பொய்யாய் சில சண்டைகள் அங்கே...........

சிறகுகள் இல்லாமலேயே
மண்ணில் பறந்தன இக்கிள்ளைகள்.....

வரவுகள் இல்லாமல்
செலவுகள் செய்யாமல் இங்கே
ஓர் அன்பு அரசாங்கம் இவர்களிடையே..........

கவலைகள் எங்கோ மறைய
மனம் லேசானது..........

கேள்வியின்
தோலைந்த விடையாய்
நட்சத்திரங்கள் இங்கே மண்ணில்.

இர.குமார்.

காதல் யுத்தம் துவங்கட்டும்...................

நம் இருவருக்குமிடையான மௌனங்களில்
இலைமறை காயாய் சில மொழிகள்
எப்பொழுதும்.............

உன்னை பார்க்கும் போதெல்லாம்
ஒருகுளிர் கால இரவின் ஏக்கத்தோடு
மனம் போர்வைக்காக அலைகிறது.................

உன் விழிகள் அசையும் போதெல்லாம்
மனதின் உள்ளே சில
மென்பூக்கள்மொட்டு அவிழ்கின்றன........

உன் இதழ்கள் விரியும் போதேல்லாம்
வெளியே தெரியாமல்
உள்ளே சில தூவாணங்கள்..........

உன் விழிக்குள்ளே
என்னை சிறை வைத்து
சிறையின் சாவியை துழவுகிறேன்..........

உன் இதயத்தை
திருட ஆசைபட்டு
என் இதயத்தை தொலைத்து நிற்கிறேன்...........

பொறுத்தது போதும்.........

இனியாவது........

நம்மிடையே நேசப் பூக்கள் மலரட்டும்........
காதல் யுத்தம் துவங்கட்டும்...................

இர.குமார்.




நாங்கள் வண்ணத்துப் பூச்சிகள்........

ஒரு மாலைபொழுதின் மயக்கத்திலே
ஒளி மங்கும் வேளையிலே
வண்ணத்துப் பூச்சிகள்
சிலகிறக்கமாய் சிறகுகள் விரித்தன.............

அழகின் சாயைகளையெல்லாம்
தன்னோடு கட்டிக் கொண்டு
வானம் நோக்கிமேல் எழும்பின.........

சந்தோசத்தின் பாதைகளை
எல்லாம் தேட தங்கள் பயணத்தை
துடிப்பாய்த் துவக்கின........

வழிமறித்து நின்ற என்னை
விசாரிப்புக்கள் ஏதுமின்றி
வருடியே சென்றன.............

கிளைகள் விரித்த மரங்களை
மடல்கள் விரித்த பூக்களை
உறவுகள் கொண்டாடின...........

புழுவாய் இருந்தோம்
இன்று புதிதாய் பிறந்தோம்
என்று முரசு கொட்டின...........

குரல்கள் ஏதும் இன்றி
அவைபறை எழுப்பின...............
"நாங்கள் வண்ணத்துப் பூச்சிகள்".

இர.குமார்.

மழலை காலங்கள்

சிறகு முளைத்த வண்ணத்துப் பூச்சியாய்..........
துயரங்களே இல்லாமல் துள்ளிய காலங்கள்.........

கள்ளங்களே இல்லாமல்
உள்ளம் எங்கும் உவகையாய்
உலகை வலம் வர நினைத்த காலங்கள்..........

வெறுமைகளே இல்லாமல்
வெள்ளை மனமாய், வெகுளியாய்
மிதகுகள் சில செய்து
நிலவில் மிதக்க நினைத்த காலங்கள்........

காகிதத்தில் கப்பல் செய்து
ஓடையிலே விட்டு விட்டு
கர்வமாய் இறுமாந்த காலங்கள்...........

சுமைகளே இல்லாமல்
சுகமாய் சுதந்திரமாய்
சிரிப்புக்கள் சில
சிதறிய காலங்கள்...........

மழலை காலங்கள்
மழை சாரலாய் மனதின் ஒருபுறம்......

இனிமையாய் தூறியபடி
எப்பொழுதும்..........


குமார்

காற்றுக்கு என்ன வேலி

காற்றுக்கு என்ன வேலி
மன ஊற்றுக்கு என்ன தளைகள்.....

ஆற்றுக்கண் உள்ள நீர் போல
உன் வலிவுகளின் விரிவுகளை பரப்பி செல்......

மரங்களின் வேர்களாய்
உன் அடிதளங்களை வலுவாய் அமைத்து செல்..........

விதையிலிருந்து எழும் விருட்சமாய்
என்றும் மேலே உயர்ந்து செல்......

மதியின் துணையாய்
எதிர் வரும் தடைகளை உடைத்து செல்......

உந்தன் குணங்களின் திறங்களால்
அனைவரையும் அரவணைத்து செல்......

கரைகளற்ற கடலாய் கவலைகளற்று
மகிழ்ச்சியை உனக்குள் நிரப்பிச் செல்......

பரந்த வானில் உந்தன் திறமைகளின்
சிறகுகளை விரித்து செல்......

காற்றுக்கு என்ன வெலி
மன ஊற்றுக்கு என்ன தளைகள்.....

மனங்களின் வலிவுகளால்
புதிதாய் மீண்டும் எழுது
ஒரு புதிய சரித்திரம்...........


குமார்

இது ஊடல் காலம்....[பிரிபவர்கெல்லாம்]


ஒரு வசந்த காலத்தின் மாலையில்
ஒரு ரோஜா மலருடனும்,
உன் இதழோர புன்னகையோடும்
நம் காதல் காலம் இனிதே தொடங்கியது.
விழி பரிமாற்றங்களோடு......
நம் நேசத்தின் ஊட்டத்தினால்
நம் காதல் குழந்தை
அழகாகநடை பயின்றது.............
வசந்ததிற்கு பின்னான
இலையுதிர் காலம் போல
நம் புரிதலின் சிறிய விரிசலில்
என்னுடனான
உன் ஊடல் காலம் தொடங்கியது.
நம் சந்தோச இலைகள் சில
காதல் கிளைகள் விட்டு
மண்ணில் சருகுகளாய் இளைபாறின........
உன்னை பிரிந்திருந்த
வினாடிகள் யாவும்
எப்பொழுதும்
உன்னை நினைவு படுத்தின
கண்முன் விரிந்திருந்த
உலகம் எல்லாம்
எங்கோ மறைந்தே போயின.................
சிதறி விழும் மழைத் துளிகளாய்
பொழிந்தும் பொழுயாமலும்
உன் சாரல்கள்
மனதில் எப்பொழுதும் தூறியபடி ....................
பிரிவுகள் ஏனோ
நேசத்தை அதிகப்படுத்தின.......
உடனே உன் பரிவுகள் காண
மனம் சிறகுகள் தேடின............
காற்றை தூது அனுப்புகிறேன் காதலி......
மன்னிப்பை ஏற்றுக் கொள்........
நம் காதலை உணர்த்திய
இதுஓர் ஊடற் காலம்.
இர.குமார்.

நினைவுகள்


அருகம்புல்லின் பனித்துளியாய்
அதிகாலையில் ஏனோ
உன் நினைவுகள்.............

துயில் கலைந்த நான்நிழலாய்
உனை தேடிய போது
நிஜங்கள் நினைவுகளை கனவென்றென............

காலை நேரத்து உறக்கம்
இன்னும் மிச்சமிருந்தது......

மனம் ஏனோ கசந்தது.........
தொலைத்து விட்ட
உற்க்கத்திற்காகவும் அல்ல......
கலைந்து விட்ட
கனவுகளுக்காகவும் அல்ல..

கலைந்த கனவில்
தொலைத்த உன் நினைவுகளுக்காக.

இர.குமார்.

போர்ப் புரவிகள்



கடிவாளங்களற்று.............
எல்லா திசைகளிலும் இயங்கும்
புரவியின் வேகத்தை சார்ந்தவை
மனிதரின் மனங்கள்....................

தளைகள் ஏதும் இன்றி
திசைகள் நான்கின் ஈர்ப்பில்
திமிர் வெள்ளம் எடுத்து
தங்கள் வேகச் சிறகுகளைவிரிப்பவை
இந்த மனப் புரவிகள்..............

கடிவாளங்கள் கொண்டு
பயிற்ச்சிகள் பெற்று
வாழ்க்கையின் இலக்குகளுக்காக
போராடும் மனங்கள்
இங்கே போர்ப் புரவிகள் ஆகின்றன.............

எங்கெல்லாம் மனம்
வலிமையின் புரவிகளை
இட்டுச் செல்கிறதோ
அங்கெல்லாம் அசைகின்றன
வெற்றியின் கொடிகள்......................

எங்கெல்லாம் மனம்
திறமையின் சிறகுகளை
விரித்துச் செல்கிறதோ
அங்கெல்லாம் விரிகின்றன
வலிமையின் சாமரங்கள்...................

வாழ்கையின் களங்களில்
வாட்களை ஏந்தி
தடைகளை கடந்து
வெல்கையின் இலக்கை நோக்கி
மட்டுமே நகர்கின்றன
பயிற்சிகள் பெற்ற மனப் புரவிகள்...............

மனதை பழக்கக் கற்றுக் கொள்ளுங்கள்............
உடலை போலவே
மனதின் வலிமைக்கும்
பயிற்சிகள் அவசியம் ஆகின்றன..............
நாளைய உலகை வெல்ல
தொடங்கட்டும் பயணம்
உங்கள் போர்ப் புரவிகளில் இன்றே.

இர.குமார்.

யுத்தங்கள் இனித் தொடங்கட்டும்...........





கார்மேகங்கள் சாரல்கள் தூவ

மைதானங்களின் மேல்

சில மழலைகள்

விளையாட்டாய் வாளெடுத்து.............

தீமைகள் எங்கு விளைந்தாலும்

கண்ணன் வருவான்........,

மனித உருவெடுத்து.........

பிறர் மனம் மகிழ வில்லெடுத்து.............

தொலைவில் ஒரு பாட்டியின் குரல்

நெடுங்கதையாய்...................

மனிதம் அற்று மரத்துப் போய்...........

கொடுமைகள் கண்டு

கண்கள் பூத்துப் போய்.......

அச்சங்களின் வேர்கள் ஆழப் பரவ........

வலிகளின் வாசனையை நுகராதவர்களாய்

இங்கு வாழும் மிகப் பலர்..................


பாதைகள் எங்கும் மலர்கள் தூவ......

வீதிகள் எங்கும் தோரணங்கள் கட்டி........

முட்களின் நுனிகளை அறியாது......,


ரோஜாக்களின் இதழ்களை சூடி........

ரதங்களில் உலா வருபவர்கள்

இங்கு மறு சிலர்..........................


ஒரு பாலைவன நாளின்

புழுதி படிந்த வாகன கண்ணாடியாய்.........

தெளிவில்லாமல் நித்தம் சுற்றுலாக்கள்......

கானல் நீரை தேடி...........

பாலைவன சோலைகளை நாடி..............

மாற்றங்கள் இனியெங்கிலும்

இனிதே மலரட்டும்........


நன்மைகளின் விதைகள் விருட்சங்களாய்

வான் நோக்கி செழிக்கட்டும்...........


கதிர்கள் பட்ட பனித்திரைகளாய்

உங்கள் அச்சங்கள் உடையட்டும்............


உங்கள் வாள்களின் நுனியில்

தீமைகள் புதையட்டும்.................


உங்கள் வலிமைகளின் வேர்களில்

நாளைய உலகம் வளரட்டும்...........


வாழ்க்கையின் யுத்தங்கள்

இன்றே இனிதே தொடங்கட்டும்................


இர.குமார்



Saturday, June 14, 2008

அழகாய் ஒரு உலகம்

அருகம்புல்லில் அழகாய்
சில பனித்துளிகள் அதிகாலையில்.....................

சிலிர்ப்பாய் என் மேல்
சிலகாலை நேரத்து சாரல்கள்...........

படபடப்பாய் சில வண்ணத்துப்பூச்சிகள்
என் வழியில்........

வழிமறித்து நின்ற
என்னை வருடியே
சென்றன சிறகடிப்போடு..........

வானத்தில் சில நிறக்கோடுகள்
வானவில் ஜாலங்கள்
எங்கும் வண்ணம் நிரம்பி........

பூக்கள் சில
என்னை நோக்கி
மணத்தோடு நகைத்தன......

வண்டுகள் சில
காதில் இசைத்தன........

மூங்கில் காடுகள்
காற்றில் கீதம் இசைத்தன........

மரங்கள் பசுமையாய்
அருகேஅழைத்தன......

காற்றின் இதமான வருடலோடு
மனம் இரம்மியமானது.......

அழகாய் தான்
இருக்கிறது உலகம்.........

மனம் எங்கும்
ரசனையை தூவி
விழி விரித்து
இதயம் திறந்து
பார்க்கும் போதெல்லாம்...............


இர.குமார்.


நாங்கள் தமிழர்கள்-உரக்க சொல்வோம் உலகுக்கு


நாங்கள் தமிழர்கள்-
உரக்க சொல்வோம் உலகுக்கு .......
நாங்கள் புவியின்
பண்டை புதல்வர்கள்......
தமிழ் எங்களின் மூச்சு
மறம் எங்களின் நாடி...........
பண்பு எங்களின் உயிர்
விருந்தோம்பல் எங்களின் துடிப்பு.......
விதிகளை விடுத்து
மதிகளை கொண்டு
உலகம் வெல்கிறோம்......
தடை எங்கும்
இல்லை எங்களுக்கு......
மடை திறந்து
புவி எங்கும் நாங்கள்,
எங்கள் புகழை பரப்பி.............
மனம் கொண்டு நாங்கள்
திறம் கொண்டு இங்கே.......
வான் கொள்ள நாங்கள்
வாள் எடுத்து இங்கே......
எங்கள் பெயர்தமிழர்கள்...............
யுகத்தின் முதல்வர்கள்........
புவியின்பண்டை புதல்வர்கள்..........

இர.குமார்.

வெற்றியின் உலகம்

விற்களிலே நாணேற்றி
அம்புகளை தொடுத்தார்கள்
மன்னவர்கள் எங்களின் முன்னவர்கள்.

நாங்களும் தான் தொடுக்கிறோம்
எங்கள் முயற்சி கணைகளை
உழைப்பையே நாணாக்கி.........

இலக்குகள் தூரமில்லை
இங்கே இதயம் இருந்தால்............

விதிகளும் இல்லை
இங்கே மனம் இருந்தால்.............

விதிகளின் வழிகளில்
எங்களை தொலைத்தவர்கள்
இல்லை நாங்கள்.......

மதிகளில் விழி வைத்து
எங்கள் பாதைகளை தேடுகிறோம்..............

வெற்றிகளை மட்டுமே
பரிசாக கொண்டு
ஒரு உலகம்
எங்களுக்காக காத்திருக்கிறது........

தொலைவுகள் தூரமில்லை.......
தடைகளும் இங்கில்லை.........

இதயம் உண்டு இங்கே.......
ஒரு உலகம் உண்டு இங்கே...........



இர.குமார்

வாழ்க்கை

நொடிகளின் மறைவுகளில்
காலம் தன் எல்லைகளை நகர்த்துகிறது........

அனைவருக்கும் வாழ்க்கை
பெரிய கனவுகளோடு தான் தொடங்ககுகிறது......

வாழ்க்கை சுழற்றுகின்ற சுழற்ச்சியில்
எங்கோ தூக்கி எறியப்படுகிறொம்.......

கிடைத்த இடத்தை
நிலைப்படுத்தி கொள்ளவெ
கழிகின்றன எஞ்சிய காலங்கள்........

கண்ட கனவுகள் யாவும்
கண்களுக்கு எட்டுகின்ற
நிஜங்களாய் மட்டுமே ......

கைகளுக்கு என்றும்
சற்று தள்ளியே......

வாழ்க்கை காகிதங்கள்
சூழ்நிலை காற்றால்
சில நேரம் சிறகடித்து பறக்கின்றன............

சூழ்நிலை தாக்கங்களால்
சில நேரம் சிறகடிக்க படுகிறோம்...

பறக்கத்தான் சிறகுகள் இல்லை
நடக்க என்றும் கால்கள் உண்டு
லட்சியங்களை நோக்கி........

காலத்தின் நியதிகளை
மாற்றும் உரிமை
இங்கு எவருக்கும் இல்லை....

மாற்றங்களில் அடங்கியது தான்
மனித வாழ்க்கை....

இதை உணர்ந்த எவரும்
இந்த உலகத்தில்
வருந்தியதும் இல்லை...

இதை உணர மறுத்து
வருந்திய எவரும்
உயர்ந்ததும் இல்லை........

இர.குமார்.



Friday, June 13, 2008

வாழ்க்கையின் அர்த்தங்கள்........

அழகான அர்த்தங்கள் சில இங்கே
வாழ்க்கையை செம்மைபடுத்துகின்றன.......

அர்த்தமில்லா வாழ்க்கை
பாதையில்லா பயணத்தை
போல வெறிச்சொடுகிறது......

மனிதர்களை பொறுத்தே
அர்த்தங்கள்
இங்கு மாறுபடுகின்றன........

நல்ல அர்த்தங்கள்
வாழ்க்கையின் மரங்களுக்கு
நீர் ஊற்றகின்றன...........

தவறான அர்த்தங்கள்
வாழ்க்கையின் பாதைகளில்
முட்களை நிரப்புகின்றன..........

அர்த்தங்கள் வாழ்க்கையின்
பயணங்களை
சுகமோ சுமையகவோ மாற்றுகின்றன..........

மிகச் சிறந்த அர்த்தங்களால்
வாழ்க்கையை
வளப்படுத்திக் கொள்ளுங்கள்........

அவை,
மதிகளின் விழிகளை திறக்கிறது......
சொர்க்கத்தின் கதவுகளை தட்டுகிறது.........

இர.குமார்.

Friday, May 2, 2008

நிதர்சன யுத்தம்.......


வாழ்க்கையின் களங்களில்

நாளும் சில யுத்தங்கள்நிதர்சனகளில்.

நித்தம் சில வெற்றிகள்......

நித்தம் சில தோல்விகள்......


யுத்த களங்களின் வெளி நின்று

பார்க்க மட்டுமே விரும்புகின்றவர்

இங்கு மிக பலர்.

வெற்றியின் சிறகுகளை மட்டுமே

அணிய துணிந்தவர்கள் இவர்கள்.


தோல்விகளையும் ,விழுபுண்களையும்

ஒரு பொழுதும் விரும்பாதவர்கள்.....


நெஞ்சின் உரம் கொண்டு

களங்களின் உள் செல்பவர் மிக சிலர்.....

அங்கே வெற்றியை பெறுபவர் மிக சிலர்...

விழுபுண்களை பெற்று மாள்பவர் ஒரு சிலர்.......


மனதின் வலிமை அறிந்து

தங்களின் திறங்களை அறிந்து உள்செல்பவர்கள்

என்றும் வெல்கிறார்கள்......

விதைகளாய் தங்களையே ஊன்றி

விருட்சமாய் வான் நோக்கி உயர்கிறார்கள்...


வன்மைகள் பல புதிதாய் பெற்று

விந்தைகள் பல புதிதாய் செய்கிறார்கள்........

காலம் உள்ளவும்

தங்கள் முகவரிகளை நிலைநிறுத்துகிறார்கள்......


களங்களின் வெளி நிற்கும் கூட்டமோ

பார்த்து கொண்டு மட்டுமே நிற்கிறது

இவற்றை தொடவேமுடியாத எல்லைகள்

என்று மட்டுமே எண்ணி.............


இர.குமார்.

வீழ்வதெல்லாம் தோல்விகள் அல்ல......


வீழ்வதெல்லாம் தோல்விகள் அல்ல......

எழுவதற்கான முதல் வழிகள் அவைதான்........


தோல்விகளெல்லாம் துயரங்கள் அல்ல

வெற்றியின் முதல் விளிம்புகள் அவைதான்......


துயரங்கள் எல்லாம் நிரந்தரங்கள் அல்ல.......

மகிழ்வின்

முதல் தொடக்கங்கள் அவை தான்.........


இருமைகள்தான்வெளிச்சத்தை விளம்பரபடுத்துகின்றன........

இரவுகள் தான் விடியலை தருகின்றன...............


சேற்றிலிருந்து தான்செந்தாமரைகள் பிறக்கின்றன.......

கருமைதான் வெண்மையை தெளிவாகக் காட்டுகின்றன.........


உறுதிகள் மனதில் இருக்கும் வரை

விடியும் நாள் தூரம் இல்லை......


இதயம் இங்கே இருக்கும் வரை

இருள் விலகும் நாள்

தொலைவில் இல்லை.........


இங்கே,

வீழ்வதெல்லாம் தோல்விகளல்ல

எழுவதற்கான

முதல் வழிகள் அவைதான்......


இர.குமார்.

மாயமான் வேட்டை.......


அம்புகளின் தொடுப்பில்

சலசலத்தன சில பூக்கள்.....

மான்கள் பல ஓடின.....

அதை தொடர்ந்து

சில வேட்டைகளும் தொட்ங்கின......

பெண்,பொன்,மண்

மனம்,பணம்

மான்கள் பல

இங்கே இந்த புவியில்.....


வேடர்கள் பல......

வேட்டைகள் பல.....

எப்பொழுதும் துரத்தல்கள் இங்கே........

தேடுதல்களின் வேகம்

எப்பொழுதும் தீவிரமாய்......


வாழ்க்கை

ஒரு மாய மான் வேட்டை....

இங்கே வேட்டைகள்

மட்டும் தொடரும்....

மான்கள்

எப்பொழுதும் மாயமாய்...............

ஜன்னலை திறங்கள் காற்று வரட்டும்.........


மனதை சிறை வைப்பவர்கள்

என்றும் மகிழ்வதில்லைஇங்கே.............

உங்கள் மனச் சாளாரங்களைஎன்றும்

அகலத் திறந்துவைக்க முயலுங்கள்.........

அங்கே காற்று வரட்டும்........

மடல்கள் திறந்தே பின்னே

தெரியும் பூக்கள் போல........

மனம் திறந்த பின்னே

இதயம் இங்குசிறகு விரிக்கும்........

சில வண்ணத்துப் பூச்சிகள் படபடக்கும்.............

சில மின்மினிப் பூச்சிகள்

வெளிச்சம் தெளிக்கும்..........

மகிழம் பூக்கள் மடல்கள்

திறந்தே மனம் வீசும்..........

வானம் இன்றியே

வானவில் நிறம் காட்டும்.........

இறுகிய மனம் எப்பொழுதும்

இருளை மட்டுமே ஈர்க்கும்........

இள்கிய மனம்

என்றும்இதயம் கவரும்........


உங்கள் ஜன்னல்களைதிறந்து வையுங்கள்..........

அங்கே காற்று வரட்டும்.......


உவகைகள் நிரம்ப........

உள்ளம் பொங்க........

என்றும் மகிழ்ச்சிவெள்ளம் பாயட்டும்............


இர.குமார்.


புதிதாய் மீண்டும் பிறப்போம்.........


புதிதாய் மீண்டும் பிறப்போம்.........
இறந்த நொடிகளை மறந்து
இருக்கும் புதிய நொடிகளுக்குள் நுழைவோம்..............
விதியின் வரைமுறைகள் தாண்டி
புதிய வரம்புகள் தொட
என்றும் முயற்சி செய்வோம்.........
வல்லமைகள் பல புதிதாய் பெறுவோம்.....
விந்தைகள் பல
இந்த புவியில் புதிதாய் செய்வோம்..........
உழைப்பையே உரமாக்கி
நம் முயற்சி விதைகளை
இந்த பூமியில் தூவுவோம்.............
இமயமே இலக்காய்........
விடியலே நோக்காய்
எழுந்து நின்று போராடுவோம்..........
இந்த உலகம் உள்ளளவும்
நம் முகவரி இப்புவியில்
நிலைத்திருக்க முயற்சி செய்வோம்.........
புதிதாய் மீண்டும்
நாம் இங்கு பிறப்போம்.
இர.குமார்.

Thursday, May 1, 2008

இது என் கவிதை தோட்டம்




எழுத்துக்களை கோர்த்து சொற்களை படைத்தேன்


சொற்களை விதைத்து கவிதை அறுத்தேன்


எண்ணங்களை மழையாக்கி என் உள்ளத்தை தெளித்தேன்


என் மனதினை ஊற்றி கவி பூக்கள் பறித்தேன்


என் கற்பனை கொண்டு கிளைகள் விரித்தேன்


என் மகிழ்ச்சியை கொண்டு சில கூடுகள் செய்தேன்


சில பறவைகள் அங்கே இளைபாற கண்டேன்


வாருங்கள் தோழர்களே ..........




இது என் கவிதை தோட்டம் ........



இங்கே இளைப்பாற வாருங்கள்........



இர.குமார்.